தேசிய வகை
ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 2021 ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் ஒரு
கண்ணோட்டம்
சுதந்திரம் என்றாலே நம் கண் முன் நிழலாடுவது
கூண்டுக்குள் சிறைப்பட்ட அல்லது அடைக்கப்பட்ட ஒரு புறாவையோ அல்லது பறவையையோ வெளியே
சிறகடித்துப் பறக்க விடுவதுதான். தனது இயல்பான வாழ்க்கை வாழத் தடைக்கல்லாய் இருந்த
ஒன்றை உடைத்தெறிந்து சுதந்திர பறவையாய் சுற்றித் திரிவதையே சுதந்திரம் என்று சொல்வோம்.
2020 இல் மலேசிய தேசத்தைச் சிறைக்குள் அடைத்து சுதந்திரத்தைப் பறித்துச்
சென்ற கோவிட் 19 பெருந்தொற்று பல பள்ளிகளையும் பள்ளியில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்த
இளம் பிஞ்சு உள்ளங்கொண்ட மாணவ மணிகளையும் வீட்டிலேயே முடக்கி வைத்து தனது காலத்தின்
லீலைகளைப் புரிந்து வருகின்றன.
2019 ஆம் ஆண்டு சுதந்திர தினம் பள்ளி அளவில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள் மத்தியில் பல போட்டிகள், நடவடிக்கைகள் நாட்டுப் பற்றினை வளர்க்கும் விதத்தில் நடத்தப்பட்டன. மாணவர்களுக்குக் கவிதை ஒப்புவித்தல், கோலம் போடுதல், படம் வரைதல், வண்ணம் தீட்டுதல், மிதிவண்டியைத் தேசிய கொடியினைக் கொண்டு அலங்காரம் செய்தல், மலேசிய நாட்டு கலை கலாச்சாரங்களை மதிக்கும் வண்ணம் பல இனத்தவரின் பாரம்பரிய உடை அணிதல் போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களும் ஆசிரியர்களும் மிக உற்சாகமாகவும் ஆர்வமுடனும் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியபடி ரிவர்சைட் தோட்டத்தை ‘மெர்டேக்கா...மெர்டேக்கா...மெர்டேக்கா...’ என்று முழக்கமிட்டுப் போட்ட பீடுநடைகள் இன்றும் நினைவில் நிழலாடுகின்றன.
2021 ஆம்
ஆண்டு பள்ளியின் சுதந்திர தின கொண்டாட்டமானது புதிய இயல்பு முறையினைப் பின்பற்றி பள்ளியின்
தலைமையாசிரியர் திரு.இராமசாமி த/பெ நடேசன் ஐயா அவர்களின் ஆலோசனைகளுடனும் வழிகாட்டலுடனும்
பல போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட வண்ணமாகவே உள்ளன. மாணவர்களும் ஆசிரியர்களும்
ஒன்றிணைந்து கொண்டாட இயலாத நிலை இருப்பினும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கென பல நடவடிக்கைகள்,
போட்டிகளை நடத்திய வண்ணமே உள்ளனர். பள்ளியின் துணைத்தலைமையாசிரியர், புறப்பாட துணைத்தலைமையாசிரியர்,
மாணவர் நலப் பொறுப்பாசிரியர், ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பல திட்டங்கள் தீட்டி
அதனைச் செம்மையாகவும் சிறப்பாகவும் வழிநடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு இயங்கலை வாயிலாகவும்,
இணைய வசதியின் வாயிலாகவும் பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. நாட்டுப்பற்றினையும் நன்னெறிப்பண்புகளையும்
மாணவர்களிடையே வளர்ப்பது ஆசிரியர்களின் கடமைகளுள் ஒன்றாகும். இக்கோவிட் பெருந்தொற்று
காலங்களிலும் ஆசிரியர்கள் தங்களது கடமைகளை மிக நேர்த்தியாக செய்து வருகின்றனர். பள்ளி
கட்டடங்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் மனமும் மாணவர்களின் மனமும் சுதந்திரமாக
செயல்பட்டே வருகின்றன.
நாட்டுப்பற்றினை
மாணவர்களின் மனதில் ஆழமாக பதியமிடும் வகையில், முப்பரிமான வடிவிலான பொருட்களை உருவாக்குதல்,
புதிர்ப்போட்டி, நாடகம் நடித்தல், வண்ணம் தீட்டுதல், தேசிய கொடி வரைதல், கோலமிடுதல்
எனப் பல போட்டிகள் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒரு மாத காலமாக தேசிய
தினத்தை முன்னிட்டு புதிய இயல்பு முறையில் நடத்தப்படுகின்ற அனைத்து போட்டிகளின் முடிவுகளும்
எதிர்வரும் 30 ஆம் நாள் ஆகஸ்ட் மாதம் 2021 இல் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ மணிகளுக்கும்
பள்ளி சார்பாக பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படும்.
மூடப்பட்ட பள்ளிகள் மிக விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பி, மாணவச் செல்வங்கள் பள்ளி வளாகங்களில் சிறகடித்துப் பறக்கும் அந்தத் தருணங்களை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் ஆசிரிய நெஞ்சங்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் நாளே சுதந்திர தினம்.
ஆக்கம் ; ஆசிரியை திருமதி வீ.சுகுனா தேவி 2021
👍 👍
ReplyDelete